SUPER NITE

SUPER NITE

Saturday, October 12, 2013
0


திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.

இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.

எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது.

மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.

இந்து திருமணத்தை பதிவு செய்தல்.

இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம்.

மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம்.

மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள்வசிப்பதற்கான சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப் பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது.

உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.

அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.

இஸ்லாமியத் திருமணங்கள்

இஸ்லாமியத் திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன. மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.

இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.

FREE AD - CONTACT 8189911545

FREE AD - CONTACT 8189911545
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site index and link to content provided by other sites also.


*நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது. KRK NETWORK...!!!